உப்பு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினம் அரை மணி நேரம் நடப்பது அவசியம்
சென்னை: ''தினமும் அரை மணி நேரம் நடந்தால், உப்பு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்,'' என, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குநர் மணி கூறினார். சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பக்கவாத நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்வில், மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி பேசியதாவது: மூளை ரத்த ஓட்டத்தில் திடீரென ஏற்படும் அடைப்பால், கை, கால் செயலிழந்து பக்கவாதம் ஏற்படுகிறது. திடீரென ஒருபுறமாக ஏற்படும் கை, கால் பலவீனம், கை, கால் மரத்துப்போகுதல், நடப்பதில் தள்ளாட்டம், பேச்சு குளறுதல், பிறர் பேசுவதை புரிந்து கொள்ளுவதில் சிரமம், வாய் கோணலாகுதல், விழுங்குவதில் சிரமம், பார்வை மறைத்தல் ஆகியவை பக்கவாதத்திற்கான அறிகுறிகள். பக்கவாதம் வந்தால் தாமதிக்காமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, உடனடி சிகிச்சை பெற வேண்டும். அங்கு, 'திராம்போலைசிஸ்' என்ற சிகிச்சை வாயிலாக அடைப்பை கரைக்க முடியும். அதேபோல், தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நம் உடலில் உள்ள கொழுப்புசத்து, உப்பு மற்றும் சர்க்கரை சத்துகளின் அளவுகள் கட்டுக்குள் வரும். அனைத்து ரத்த நாளங்களும் விரிவடையும். ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவதும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.