மின் இணைப்புக்கு காத்திருக்கிறோம் பாஷியம் கட்டுமான நிறுவனம் விளக்கம்
கோயம்பேடு : 'கோயம்பேடில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு, மின் இணைப்பு பெற மின் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளோம்' என, கட்டுமான நிறுவனமான 'பாஷியம்' தெரிவித்து உள்ளது.கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பாஷ்யம் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனம், 15 பிளாக்குகளில், 2,078 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது.முறையான மின் இணைப்பு, தண்ணீர் வசதி இன்றி, பயனாளிகளுக்கு அந்நிறுவனம் வீடுகளை ஒப்படைத்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியான நிலையில், பாஷ்யம் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்:கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், 13 பிளாக்கிற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான பணி நிறைவு சான்றிதழ், 2024 செப்டம்பரில் பெறப்பட்டது. அதன்பிறகே, வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைக்கும் செயல் முறையை துவங்கினோம். மின் இணைப்பிற்காக, மின்சார வாரியத்திடம் ஏற்கனவே பணம் செலுத்தி விண்ணப்பித்து இருக்கிறோம். மின் இணைப்பு வழங்கப்படும்வரை, அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஜெனரேட்டர் வாயிலாக, எங்கள் செலவில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறோம். எங்களின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் போதிய அளவில் வழங்கி வருகிறோம்.இவை அனைத்தையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக தெரிவித்துள்ளோம்.இவ்வாறு பாஷியம்நிறுவனம் தெரிவித்து உள்ளது.