உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல் :அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்குமா?

 டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல் :அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்குமா?

திருவொற்றியூர்: தொடர்கதையாகி உள்ள ரேஷன் அரிசி கடத்தலுக்கு, அரசு தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவொற்றியூர் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மண்டலத்தின் கீழ், திருவொற்றியூர், எண்ணுார், மணலி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், 104 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன; 1 லட்சத்திற்கும் மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். குடும்ப அட்டைதாரர் சிலர், நியாயவிலைக் கடைகளில் வினியோகிக்கும் அரிசி தரம் இல்லாததால், அப்படியே வாங்காமல் விட்டு விடுகின்றனர். சிலர், அந்த அரிசியை வாங்கி, கடை அருகே முகாமிட்டிருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த பெண்களுக்கு, பச்சரிசி கிலோ ஏழு ரூபாய்க்கும், புழுங்கல் அரிசி 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்று விடுகின்றனர். உரிமம் ரத்து? அதேபோல, நாளொன்று 100 - 150 கிலோ இலவச அரிசியை, விலை கொடுத்து வாங்கி, மூட்டை மூட்டையாக கட்டி, மின்சார ரயில்கள் மூலம், ஆந்திராவிற்கு கடத்தி சென்று, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி., விம்கோ, கத்திவாக்கம், எண்ணுார், அத்திப்பட்டு புதுநகர் என, ரயில்வே போலீசார் நடமாட்டம் குறைவாக இருக்கும் ரயில் நிலையங்களில் இருந்து, இலவச அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் கவனித்து, நியாயவிலைக் கடைகள் அருகே, முகாமிட்டிருக்கும் ஆந்திர மாநில பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, இலவச அரிசியை, பணத்திற்கு விற்பனை செய்யும் குடும்ப அட்டைதாரரின் அரிசி உரிமையை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை