சென்னை: போக்குவரத்து குழுமமான, 'கும்டா' அறிமுகம் செய்த, 'சென்னை ஒன்' செயலியில், மின்சார ரயில் பயணியர் சீசன் டிக்கெட், ரிட்டர்ன் டிக்கெட் பெறும் வசதிகளை சேர்க்க, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை பெருநகரில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து சேவையை பயன்படுத்துவோர் டிக்கெட் எடுப்பதை எளிமைப்படுத்த, 'சென்னை ஒன்' என்ற செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை, போக்குவரத்து குழுமமான 'கும்டா' உருவாக்கியது. கடந்த செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியை, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், மாநகர போக்குவரத்து கழகம், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் பாஸ்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, புறநகர் மின்சார ரயில் பயணியர், மாதாந்திர பயண அட்டையான சீசன் டிக்கெட், புறப்படும் போதே திரும்பி வருவதற்கான ரிட்டர்ன் டிக்கெட், 'ஏசி' மின்சார ரயில் டிக்கெட், பிளாட்பார டிக்கெட், புறநகர் அல்லாத மின்சார ரயில்களில் முதல் வகுப்பு டிக்கெட் போன்ற சேவைகள் இணைக்கப்பட உள்ளன. இந்த சேவைகளை சென்னை ஒன் செயலியில் இணைக்க வேண்டும் என, கும்டா நிர்வாகம், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. இதைத்தொடர்ந்து, ஆப்லைன் முறையில் உரிய வசதிகளை ஏற்படுத்த, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக, கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.