உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர்களுக்கு துவங்கியாச்சு பாடம்

ஆசிரியர்களுக்கு துவங்கியாச்சு பாடம்

கோவை : நடுநிலை வகுப்பு மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது; நடப்புக்கல்வியாண்டில் முதல் பயிற்சி இது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இங்கிலீஷ் கவுன்சிலுடன் இணைந்து மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 'மாடல்' வகுப்பறைகளில் 'சிடி' வாயிலாகவும் கற்பிக்கப்படுகிறது.அதன்படி, நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு எளிய பேச்சு, இலக்கணம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தகட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆங்கில பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் தானே சிந்தித்தும், கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேச, எழுத தற்போது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை, திருப்பூரை சேர்ந்த 56 ஆசிரியர் பயிற்றுநர்கள் (ஆங்கில பாடம்) பங்கேற்றுள்ளனர். இன்று துவங்கும் முகாம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. இவர்களின் மூலம் அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 6,7 மற்றும் 8ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு வரும் 19ம் தேதி முதல், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 'ஐந்து கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்புக்கல்வியாண்டின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான முதல் பயிற்சி இது. தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்த பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றனர். மாவட்ட கருத்தாளர் விவேகானந்தன் உட்பட பலர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி