| ADDED : ஜூன் 18, 2024 12:38 AM
கோவை:கோவையில், 2025 ஜனவரி மாதம் 'பில்ட் மேட்' கட்டுமான கண்காட்சி நடக்கவுள்ளது. முன்னேற்பாடாக, இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.கோவையில், கட்டுமானத் துறையின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அறிய ஏதுவாக, கோவை பில்டர்ஸ் அசோசியேஷன், கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் மற்றும் ஆர்க்கிடெக்ட் அசோசியேஷன் சார்பில், ஆண்டுதோறும் 'பில்ட் மேட்' கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 'கொரோனா' பாதிப்பு காலத்தில் கண்காட்சி நடத்தப்படாத நிலையில், 2025 ஜனவரி மாத இறுதியில், நான்கு நாட்கள் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதில், கட்டுமான நிறுவனங்களின் படைப்புகளை காட்சிப்படுத்த ஸ்டால்கள் அமைப்பதுடன், ரெடிமேட் பில்டிங்ஸ், டனல் ஒர்க், பிரிகாஸ்ட் பில்டிங்ஸ், ஸ்டீல் பில்டிங்ஸ் உட்பட நவீன தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்படும் கட்டடங்கள் குறித்து, சிறப்பு கருத்தரங்கு நடக்கவுள்ளது.கண்காட்சியின் முன்னேற்பாடாக, புரூக்பீல்ட்ஸ் சாலையில் உள்ள 'வீரா' டவரில், இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கட்டுனர் சங்க தலைவர் விஸ்வநாதன், ஆர்க்கிடெக்ட் சங்க முன்னாள் தலைவர் அருண் ஆகியோர் திறந்து வைத்தனர். 'பில்ட் மேட்' தலைவர் கருணபூபதி, துணை தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் கண்ணா சொக்கலிங்கம், பொருளாளர் ராஜவேலு ஆகியோர் வரவேற்றனர்.கோவை பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் லட்சுமணன், கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.