| ADDED : ஏப் 07, 2024 10:40 PM
கோவை:கோவை மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2,871 பேருக்கு, கையடக்க கணினி வழங்கப்படவுள்ளது என்று, பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் வாயிலாக, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள், வீடியோக்கள் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல்கள், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வழி பயிற்சி ஆகியன அளிக்கப்பட்டு வருகின்றன.அதேபோல, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கற்றல் முறையை விரிவுபடுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், கையடக்க கணினி வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் மாணவர்களின் வருகைப் பதிவு, ஆசிரியர்களுக்கான பணி பயிற்சி, மாணவர்களுக்கு வீடியோ மூலம் பாடங்களை நடத்துவது ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை கல்வி மாவட்டத்துக்கு 1,757 மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு 1,114 என மொத்தம் 2,871 கையடக்க கணினிகள் பெறப்பட்டுள்ளன. 'அதிகாரிகளின் உத்தரவுக்குப் பின்னர், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கையடக்க கணினிகள் வழங்கப்படும்' என்றார்.