| ADDED : ஆக 22, 2024 11:46 PM
கோவை:கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், ஒரே நாளில் மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.இம்மருத்துவமனையில், தற்போது வரை, 4000க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது ஒரே நாளில், 53 வயதான பெண்மணிக்கு சிறுநீரகம், 47 வயதான ஆண் நோயாளிக்கு இருதயம், அதே வயதுடைய ஆண் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சமீபத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக, உடல் உறுப்புகள் ஈரோடு தனியார் மருத்துவ-மனையில் இருந்து இருதயம் மற்றும் சிறுநீரகம், தர்மபுரி அரசினர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள், அந்தந்த ஊர்களில் இருந்து கிரீன் காரிடார் என்ற அவசரகால தனிப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.மருத்துவமனையில் தயாராகக் காத்திருந்த மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று அமைப்பு நெறிமுறைகளின்படி அறுவை சிகிச்சை செய்தனர்.ஒரே நாளில் மூன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்த மருத்துவக்குழுவினரை மருத்துவமனை நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.