பொள்ளாச்சி:''கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும், 30ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது,'' என, தமிழகஅனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்.வேளாண் பல்கலையில், விவசாயிகளுக்கு இட ஒதுக்கீடு திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு, வேளாண் பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.இந்நிலையில், தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்பனை செய்ய தமிழக அரசு மறுப்பது சட்ட விரோதமாகும்.கேரளாவில் கள் இறக்க அதிகாரம் மற்றும் அனுமதியும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் கள் உற்பத்தி செய்தால், தண்டனைக்குரிய சட்டம் என்றும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயிகள் சிறையில் அடைப்பது கண்டனத்துக்குரியதாகும்.கள் விற்பனை செய்ய மறுக்கும் தமிழக அரசு, கேரளா வியாபாரிகள், தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்கலாம். விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய கள் இறக்குவதை தடுத்து, கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசு வழங்கியுள்ளது.விளை பொருட்களுக்கு ஆதார விலை கேட்டும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எம்.எஸ்., சாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து எம்.பி.,க்களை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.தமிழக அரசு, கள்ளுக்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும், 30ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.