கோவை : கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, 53 வேட்பாளர்கள் மொத்தம், 59 மனுக்கள் வழங்கியுள்ளனர்.கோவை லோக்சபா தேர்தல் அறிவிக்கை, 20ல் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் நேற்று (27ம் தேதி) வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. கோவையில் போட்டியிட, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., சார்பில் முன்னாள் மேயர் ராஜ்குமார், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எம்.ஏ., கோவிந்தராஜ் மகன் ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில், கலாமணி உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.மொத்தம், 53 வேட்பாளர்களிடம் இருந்து, 59 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், அ.தி.முக., வேட்பாளர், தி.மு.க., வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கூடுதலாக மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றனர். மாற்று வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக, 59 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.தேர்தல் பிரிவினர் கூறியதாவது:வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேட்பாளர்களின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், கூடுதலாக வழங்கிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.மாற்று வேட்பாளர்களின் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். 30ம் தேதி (சனிக்கிழமை) மாலை, 3:00 மணி வரை வாபஸ் பெற அவகாசம் இருக்கிறது. அன்றைய தினம் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
4 ராஜ்குமார்... 4 ராமச்சந்திரன்!
கோவையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரின் பெயர் ராஜ்குமார்; அ.தி.மு.க., வேட்பாளரின் பெயர் ராமச்சந்திரன்.வாக்காளர்களை குழப்புவதற்காக, எதிரணியை சேர்ந்தவர்கள், ராஜ்குமார் என்ற பெயரை கொண்ட நான்கு சுயே., வேட்பாளர்கள், ராமச்சந்திரன் என்ற பெயரை கொண்ட நான்கு சுயே., வேட்பாளர்கள் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதேபோல், பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டியை சேர்ந்த அண்ணாமலை பெயரில், ஒரு மனு தாக்கலாகியுள்ளது.இம்மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில், வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை, கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண வேண்டும்.