| ADDED : மே 27, 2024 11:23 PM
மேட்டுப்பாளையம்:காரமடையில், குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து, வடமாநில இளைஞரை, மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கினர்.காரமடை அருகே திம்மம்பாளையம்புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 22 வயது மதிக்கதக்க வடமாநில இளைஞர் ஒருவர், அப்பகுதியில் சுற்றி திரிந்தார். அப்போது, அங்கு வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுடன் அந்த இளைஞரும் விளையாடினார். விளையாடிய போது குழந்தைகளை தூக்க முயன்றார். இதையடுத்து, அவரை அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பினர்.பின், அவர் மீண்டும் சிறிது நேரம் கழித்து, அங்கு வந்து, குழந்தைகளின் அருகே சுற்றி திரிந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள், வடமாநில இளைஞரை குழந்தையை கடத்த வந்ததாக நிணைத்து, அவரை பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின், இதுகுறித்து காரமடை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற, காரமடை போலீசார் இளைஞரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பின், காரமடை போலீசார், இளைஞரை விசாரித்ததில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. மேலும், அவர் தொடர்பான விவரம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து, பொதுமக்கள் வட மாநில இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.