அன்னூர்:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின், சோதனை ஓட்டம் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது.அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டு திட்டம், 1,745 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து, 2023ம் ஆண்டு மார்ச் மாதம், முதல் சோதனை ஓட்டம் துவங்கியது. அன்னூர் அருகே, குன்னத்தூராம்பாளையத்தில் அமைத்துள்ள நீரேற்று நிலையத்திலிருந்து, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது.அன்னூர் வட்டாரத்தில், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மழை பெய்யாததால் ஏற்பட்ட கடும் வறட்சியால், ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.அதனால் சோதனை ஓட்டம் தடைப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து வரத் துவங்கியுள்ளது. அதனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின், சோதனை ஓட்டம் மீண்டும் துவங்கியது.அன்னூர் குன்னத்தூராம்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து, தண்ணீர் பம்பிங் செய்ததில், அன்னூர் அருகே, 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள, கெம்பநாயக்கன்பாளையம் குளத்திற்கும், 65 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள எல்லப்பாளையம் ஆவாரம் குளத்திற்கும், தண்ணீர் வந்து கொண்டுள்ளது.இதை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள், அத்திக்கடவு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இத்திட்டம் முழுமையாக செயல்பட, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.