வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் குப்பை அழிக்க பயோமைனிங் - பேஸ் 2 திட்டம்
கோவை: ''வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை அழிக்கும், 'பயோமைனிங் - பேஸ் 2' திட்ட பணிகள் அடுத்த வாரம் துவங்கும்,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.கோவை நகர்ப்பகுதியில் சேகரமான குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் மலைக்குன்று போல் கொட்டப்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் பாதித்ததால், 'பயோமைனிங்' முறையில் விஞ்ஞானப்பூர்வமாக அழிக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. பேஸ்-1 திட்டத்தில், 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, 'பயோமைனிங் - பேஸ் 2' திட்டத்தில், 58.54 கோடி ரூபாயில், ஏழு லட்சத்து 94 ஆயிரத்து, 138 மெட்ரிக் டன் பழைய குப்பையை அழிக்க, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சமீபத்தில் கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இப்பணி அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பயோமைனிங் பேஸ்-2 திட்ட பணி, அடுத்த வாரம் துவங்கும். தேவையான இயந்திரங்கள், ஷெட் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. பழைய குப்பை, ஒன்றரை வருஷத்தில் முழுமையாக அழிக்கப்பட்டு, 75 ஏக்கர் நிலம் மீட்கப்படும்,'' என்றார்.