| ADDED : ஜூன் 18, 2024 12:43 AM
கோவை;குறிச்சி கிராமம் முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி வரை சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நில எடுப்பு செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க இன்றும் நாளையும் கிணத்துக்கடவு தாலுகாவில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:தேசிய நெடுஞ்சாலை எண் - 209 கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை விரிவாக்கப்பணிகளுக்காக, குறிச்சி கிராமம் முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி கிராமம் வரை நான்கு கட்டங்களாக, நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது.நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களுக்கும், நில உரிமைதாரர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தொடர்ந்து அறிவிப்புகளை சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அனுப்பியும், சில நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகை வழங்க தேவைப்படும் ஆவணங்களை சமர்பிக்கவில்லை. பட்டாதாரர்கள் அலுவலகத்தில் ஆஜராகவும் தவறி விட்டனர். இதனால், இழப்பீட்டுத்தொகை வழங்காமல் நிலுவையில் உள்ளது.அதனால் பட்டாதாரர்களின் வசதிக்காக வரும் 18, 19 ஆகிய நாட்களில், கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதில், நில உரிமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று, உடனடியாக இழப்பீட்டுத்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை நில உரிமைதாரர்கள் பயன்படுத்தி, தங்கள் இழப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.