கோவை:மாநகராட்சி துாய்மை பணியாளரை தாக்கிய ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் தரணிதரன்,23; மாநகராட்சி துாய்மை பணியாளர். கடந்த, 26ம் தேதி ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அங்கு தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார்,29, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர்,20, மூக்கன்(எ)அருண்,21, செட்டிபாளையத்தை சேர்ந்த சுமன்,21, உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்,23, ஆகியோர் ஆட்டோவில் வந்தனர்.குடிபோதையில் இருந்த ஐந்து பேரும், தரணிதரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆட்டோவில் வலுக்கட்டாயமாக துாக்கிச் சென்றனர். செட்டிபாளையம் பை-பாஸ் அருகே ஓரிடத்தில் ஆட்டோவை நிறுத்தி, தரணிதரனை தடியால் தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி, மீண்டும் ஒலம்பஸ் வந்து விட்டுச்சென்றனர்.காயமடைந்த தரணிதரன், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், ஐந்து பேரையும் ராமநாதபுரம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்றொரு தாக்குதல்
மாநகராட்சி துாய்மை பணியாளரான சுனில்குமார்,19, புலியகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு அந்தோணியார் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அவரை வழிமறித்த அம்மன்குளத்தை சேர்ந்த நவீன்,26, இரு சக்கர வாகனத்தை கேட்டுள்ளார். தரமறுத்ததால், வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக்கொண்டதுடன், பாட்டிலால் முகத்தில் தாக்கியுள்ளார். காயமடைந்த சுனில்குமார், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.