| ADDED : ஜூலை 19, 2024 12:08 AM
கோவை;மின்கட்டண உயர்வும், அதை விட, நிலை கட்டணமும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு தொழில்கள் அழியும் நிலையை உருவாக்கியுள்ளது. நிலை கட்டணத்தை முன்புள்ள நிலைக்கு குறைக்க வேண்டும்,' என, கோவையில் நடந்த தொழில்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.கொடிசியா தலைவர் கார்த்திக், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மிதுன் ராம்தாஸ், தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் சங்கங்களில் கூட்டம் நடவடிக்கை குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். ஏற்கனவே முதல்வர் உறுதி அளித்தபடி கோரிக்கைகளை கேட்டு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். நிலைக்கட்டணத்தை பொறுத்தவரை 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஓடினாலும் ஓடாவிட்டாலும் இந்த நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பல சிறு, குறு தொழிற்சாலைகளில் ஒரு ஷிப்ட் ஓட்டுவதற்கான ஆர்டர்கள் கூட இல்லை. நிலையில் நிலைக்கட்டணமாக மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்துவது சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளன. நிலைக்கட்டணத்தை முன்பு உள்ள நிலைக்கு குறைக்க வேண்டும். சொந்தமாக வீடுகளுக்கோ தொழிற்சாலைகளுக்கோ சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. தூய்மையான, இயற்கையான முறையில், எவ்வித சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத வகையில் பெறும் சோலார் மின் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும். மாறாக தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்திற்கு நெட்வொர்க்கிங் சார்ஜ் ஆக யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயத்துள்ளது. இந்தக் கட்டணத்தையும் தற்போது உயர்த்தி உள்ளது. இதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.உயர் மின் அழுத்த மின்சாரம் பெறுவோர் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க முடியும். குறைவழுத்த மின்சாரம் பயன்படுத்துவருக்கும் இந்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் கோவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.'மின் கட்டண உயர்வு இரண்டு முறை உயர்த்தப்பட்டு விட்டது. இதற்கு மேலும் உயர்த்துவது, தொழில்களைக் கடுமையாக பாதிக்கும். கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுப்போம். கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்' என கூட்டத்தில் பங்கேற்ற தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.