கோவை;தெற்கு ரயில்வேயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் கடந்த நிதியாண்டில், ரூ.325 கோடி வருவாய் ஈட்டி, அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே ஸ்டேஷன்கள் வரிசையில், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய, தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய, 10 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்களில், கோவை ரயில்வே ஸ்டேஷன் மூன்றா-வது இடத்தைப் பிடித்துள்ளதாக, 'ராக்' அமைப்பின் இணைச் செயலாளர் சதீஷ் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பெறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே ஸ்டேஷன்களில் கோவை, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.2022--23-ல் 285 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 2023--24-ல் 325 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்கள், தெற்கு ரயில்வேயின் கோட்ட தலைமையகமாக உள்ளது. எனவே கோவையை தலைமையிடமாகக் கொண்டு, ரயில்வே கோட்ட அலுவலகம் அமைக்க வேண்டும். பிட்லைன் அமைக்கணும்
கோவை போத்தனூரில், கூடுதலாக ரயில்களை பராமரிக்கும் வகையில், பிட்லைன் ஏற்படுத்த வேண்டும். இதனால், புதிய ரயில்களை இயக்க முடியும்.பழநி வழியாக பெங்களூரு, தூத்துக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை மற்றும் மதுரைக்கு இரவு நேர ரயில் சேவையை சீரமைக்கும் பணி, இன்னும் துவங்கப்படவில்லை.கோவையில் இருந்து டெல்லி, ஜபல்பூர், தன்பாத் மற்றும் திருநெல்வேலிக்கு நேரடி ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாட்னா, கொல்கத்தா, பிலாஸ்பூர், சென்னை எழும்பூர் ஆகிய நகரங்களுக்கு, புதிய ரயில் சேவை துவக்க வேண்டும்.இதனால், கோவை ரயில்வே ஸ்டேஷன் வருவாய் அதிகரிக்கும். இது பயணிகளுக்கும், ரயில்வேதுறைக்கும் பரஸ்பரம் பயன் தரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
எவ்வளவு வருவாய்?
சென்னை சென்ட்ரல், ரூ.1,216 கோடியும், சென்னை எழும்பூர், ரூ.564 கோடியும், கோவை, ரூ.325 கோடியும், திருவனந்தபுரம் சென்ட்ரல், ரூ.263 கோடியும், தாம்பரம், ரூ.234 கோடியும், எர்ணாகுளம், ரூ.-227 கோடியும், மதுரை, ரூ.208 கோடியும், கோழிக்கோடு, ரூ.179 கோடியும், திருச்சூர், ரூ.156 கோடியும், திருச்சி, ரூ.155 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன.