| ADDED : ஜூன் 03, 2024 01:39 AM
கோவை;''புதிய கட்டடம் கட்டுபவர்கள் கட்டட தொழிலாளர்களுக்கு, காப்பீடு செய்து இருந்தால் மட்டுமே அரசு கட்டுமான அனுமதி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறி இருப்பதாவது:சமீபத்தில், கோவை சின்னவேடம்பட்டி பகுதியில், புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு கட்டட தொழிலாளர்கள், சென்ட்ரிங் பிரிக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்தனர்.இந்த கட்டடத்தின் உரிமையாளர் ஒரு ஆட்டோ டிரைவர். இறந்த இருவருக்கும் இழப்பீடு வழங்கும் அளவுக்கு அவருக்கு வசதி இல்லை.இது போன்ற விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு கிடைப்பதில்லை.கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டத்தில் உள்ளபடி, கட்டுமானப் பணியில் வேலை செய்யும் போது விபத்து நடந்தால், தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும். ஆனால் யாரும் செய்வதில்லை.இதனால் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கு, நல வாரியம் வழங்கும் உதவி தொகை மட்டுமே கிடைக்கிறது.புதிய கட்டடம் கட்டுபவர்கள், கட்டட தொழிலாளர்களுக்களுக்கு காப்பீடு செய்து இருந்தால் மட்டுமே, கட்டுமான அனுமதி வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.