உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திட்டங்களுக்கு ரூ.150 கோடி நிதி திரட்ட கடன் பத்திரம் வெளியிடுது மாநகராட்சி

திட்டங்களுக்கு ரூ.150 கோடி நிதி திரட்ட கடன் பத்திரம் வெளியிடுது மாநகராட்சி

கோவை;கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, 150 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, கடன் பத்திரம் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் பிரதான வருவாய். இவை தவிர, காலியிட வரி, தொழில் வரி, தொழில் உரிமம், குத்தகை மற்றும் ஏல இனங்கள் வாயிலாகவும் வருவாய் ஈட்டப்படுகிறது. இவ்வகையில், ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படும்.நடப்பு (2024-25) நிதியாண்டில் உத்தேசமாக ரூ.3,182.21 கோடி வருவாய் கிடைக்கும்; ரூ.3,300.43 கோடி செலவினம் ஏற்படலாம்; ரூ.118.22 கோடி பற்றாக்குறை ஏற்படும் என, பட்ஜெட் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் நிதி ஒதுக்கும்; மானிய நிதியும் வழங்கும். இருப்பினும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, 150 கோடி ரூபாய் திரட்டுவதற்காக, கடன் பத்திரங்கள் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.அதாவது, மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 125 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்கு நிதி திரட்ட கடன் பத்திரம் வெளியிடப்படுகிறது. கமிஷனர், துணை கமிஷனர்கள், நகர பொறியாளர் மற்றும் உதவி கமிஷனர் (கணக்கு) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படும். இதுதொடர்பான தீர்மானம் மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

3 இடங்களில் ஆகாய நடைபாதை

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில், ஆகாய நடைபாதை அமைக்க, மாநகராட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தனியார் நிறுவனம் நியமிப்பதற்கு, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அவிநாசி ரோட்டில் தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது; இதில், 5 இடங்களில் சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும். அதற்கு பதிலாக, லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்க, கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில், மாநகராட்சியால் ஏன் இப்பணி மேற்கொள்ள முனைப்பு காட்டப்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மெட்ரோ சந்திப்பு நிலையம் வரப்போவதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உயரதிகாரிகள் சமீபத்தில் கள ஆய்வு சென்றனர். 20 கோடி ரூபாயில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இச்சூழலில், இப்பகுதியில் ஆகாய நடைபாதை அமைக்கும் பட்சத்தில், அடுத்தடுத்த திட்டங்கள் வரும்போது, அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உயர்மட்ட இரும்பு பாலம் இருந்தது; மேம்பாலம் கட்டுவதற்காக தற்காலிகமாக அகற்றப்பட்டு, பாரதி பார்க் பணிமனையில் வைக்கப்பட்டது. மேம்பாலம் கட்டிய பின், மீண்டும் வைக்கவில்லை. இப்போது புதிதாக அமைக்க ஆலோசிக்கப்படுகிறது. பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வீணாக்காமல், ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டுமென, கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

என்.ஓ.சி., வழங்குவதற்கு அனுமதி

ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, திறந்தவெளி சிறைச்சாலை அமைந்துள்ள இடத்தில், 10.47 ஏக்கர் மற்றும், 10.25 ஏக்கர் என, 20.72 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அவ்விடம், 'அரசு புறம்போக்கு - திறந்தவெளி சிறைச்சாலை' என்ற வகைப்பாட்டில் உள்ளது.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நில மாறுதல் செய்வதற்கு மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) வழங்க, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை