| ADDED : மே 09, 2024 04:10 AM
கோவை, : வங்கி விவரங்கள் முடக்குவதாக கொரோனா தடுப்பூசி குறித்து பரவும் மெசேஜ் குறித்து சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்தனர்.சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், பேஸ் புக் ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அதில் அவசரத் தகவல், தயவு செய்து கவனிக்கவும். உங்களுக்கு ஒரு அழைப்பு வரும் நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்கும். ஆம் என்றால், 1 ஐ அழுத்தவும், இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.நீங்கள், 1 அல்லது, 2 எதை அழுத்தினாலும் உங்கள் மொபைல் போன் செயலிழந்து, உங்கள் வங்கி விவரங்கள் முழுவதும் மறைந்துவிடும். எனவே உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல் போன்களிலும் விரைவாகப் பரவ வேண்டும். சைபர் கிரைம் போலீஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மொபைல் போனில் வரும் தெரியாத எண்களை கண்டு மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இது போன்ற மெசேஜ் சைபர் கிரைம் போலீசாரால் அனுப்பப்படவில்லை. மேலும் இது போன்ற எந்த அழைப்பும் பொது மக்களுக்கு வரவில்லை. வந்ததாக புகாரும் பெறப்படவில்லை.யாரோ இது போன்ற மெசேஜை உருவாக்கி பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.