உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா :வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா :வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை

கோவை:கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில், பண விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது; இதுபற்றி விசாரித்து பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று, தேர்தல் கமிஷனுக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு, இவ்வமைப்பின் தலைவர் ஈஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:நடக்கவுள்ள லோக்சபா தேர்தல், நேர்மையாகவும், ஜனநாயகமாகவும், நடைபெற வேண்டும் எனவும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்று, ஏற்கனவே மனு அனுப்பியிருந்தோம். கோவை தொகுதி முழுவதும், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டோம்.அரசியல் தலைவர்கள் ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம் என்று, உறுதிமொழி தர வேண்டும் என கோரிக்கை வைத்து,ஐகோர்ட்டில் அனுமதி பெற்று உண்ணாவிரதம் நடத்தினோம்.எனது மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பல்வேறு குழுக்கள் அமைத்து, நேர்மையாக தேர்தலை நடத்துவதாகவும் பொள்ளாச்சி, சிவகங்கை, தென்காசி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பதில் அனுப்பியுள்ளனர். தேர்தல் கமிஷன் அமைத்த குழுவினர், அப்பாவி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சோதித்து, அவர்களைப் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.ஓரிரு சம்பவங்களைத் தவிர, அரசியல்வாதிகள் இதில் சிக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக, கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட, பெரும்பாலான பகுதிகளில் பண விநியோகம் நடந்து கொண்டிக்கிறது.தேர்தல் கமிஷன் நடத்திய, சோதனைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகியுள்ளது. பெருமளவிலான வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதால், இந்தத் தேர்தல் நியாயமாக நடக்க வழியில்லை.பணம் எங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டுள்ளது, யார் விநியோகம் செய்தார்கள் என்பதை உளவுத்துறையினர் எளிதாகக் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தல் கமிஷன் உடனடியாக இதை விசாரித்து, பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.ஒரு முறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பணநாயகத் தேர்தலை எதிர்காலத்தில் நிறுத்த முடியும். அதனால் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை