கோவை : நேசனல் இன்சூரன்ஸ் நிறுவனம், மெடிகிளைம் தொகை வழங்க மறுத்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை அருகேயுள்ள கரையாம்பாளையத்தை சேர்ந்தவர் யமுனா ராணி. தனது குடும்பத்தினர் பெயரில், 2023, ஏப்., 28ல், நான்கு லட்சம் ரூபாய்க்கு, மெடிகிளைம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்தார். இந்நிலையில், யமுனா ராணியின் தந்தை செல்வராஜூக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நீலாம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற தொகை 9.21 லட்சம் ரூபாயில், நான்கு லட்சம் ரூபாய் மெடிகிளைம் தொகை தரக்கோரி, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மனுதாரரின் தந்தைக்கு ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்பு இருந்ததை, பாலிசி எடுக்கும் போது குறிப்பிடாமல் மறைத்து விட்டதாக கூறி, விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மருத்துவ சிகிச்சை பெற்ற தொகையில், நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.