பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால், மேல்ஆழியாறு அணையில் இருந்து, வினாடிக்கு, 2,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், அணைகளுக்கான நீர்வரத்து உயர்ந்து வருகிறது.இந்நிலையில், காடம்பாறை அணையில் இருந்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் தண்ணீர் மேல்ஆழியாறு வந்தடையும் நிலையில், மீண்டும் நீரேற்று புனல் வாயிலாக, காடம்பாறை அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இருப்பினும், மேல்ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அங்கிருந்து, 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அவ்வழித்தடத்தில் உள்ள பாலத்தை கடந்து தண்ணீர் வெளியேறுவதால், நவமலை மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், வாகனத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து, 3,356 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று, காலை நிலவரப்படி, 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 95.80 அடியாக இருந்தது.