| ADDED : ஏப் 12, 2024 10:39 PM
சொந்த கட்சியினர் போட்டியிடாததால், கம்யூ., கட்சியினர் பிரசாரத்துக்கு செல்லாமல் தவிர்ப்பதால், தி.மு.க., கூட்டணி கட்சியினர், 'அப்செட்' ஆகியுள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கம்யூ., கட்சிகள் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான தி.மு.க.,வுடன் இணைந்து, மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் கம்யூ., போட்டியிடுகிறது. கோவையில் கடந்த தேர்தல்களில் மா.கம்யூ., போட்டியிட்டது. தற்போது, போட்டியிடவில்லை. தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தது. கோவையில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சியினரும் பல்வேறு பகுதிகளிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாரும் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், அவருக்கு உதவியாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய கம்யூ., கட்சியினர் பிரசாரத்துக்கு செல்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர். தங்களது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று அங்கு பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளனர். சிலர் கேரளா பக்கம் சென்றுள்ளனர். இதனால், தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.