UPDATED : மார் 22, 2024 12:40 PM | ADDED : மார் 22, 2024 12:40 AM
கோவை:கோவை லோக்சபா தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் முன்னாள் மேயர் ராஜ்குமார் அறிமுக கூட்டம், காளப்பட்டி ரோட்டில் உள்ள மண்டபத்தில் நேற்று நடந்தது.தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு மகத்தான திட்டங்கள், தேர்தலுக்கு முன் நிறைய அறிவிக்க இருந்தோம். சில காரணங்களால் தள்ளிப்போகிறது. மத்திய அரசு மாறியதும், இன்னும் பல திட்டங்கள் குவிவதற்கு வாய்ப்பிருக்கிறது. கோவை தொழில் வளம் மிகுந்த பகுதி; அடுத்தகட்ட வளர்ச்சி ஏற்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் வரும்போது, சூசகமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என நம்புகிறேன்.எதிர்வரும் தேர்தலில், பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறுவார். மகத்தான வெற்றி கோவைக்கு காத்திருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.நிருபர்களிடம் ராஜா கூறியதாவது:எதிரணியினர் அனைவரும் 'டிபாசிட்' இழக்கும் வகையில், தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். பா.ஜ., தேசிய தலைவர் வந்தாலும் கூட, கோவையில் 'டிபாசிட்' இழக்கும். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஓரணியில் தான் இருக்கிறது. அ.தி.மு.க., யாருக்கு வேலை செய்வார்கள் என்கிற கேள்வி இருக்கிறது. இரண்டாம் இடத்துக்கான போட்டி கடுமையாக நடக்கிறது. பா.ஜ., அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; வஞ்சிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.