| ADDED : மே 29, 2024 12:50 AM
கோவை:பருவ மழைக்கு முன் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்வதுடன், ஏற்படுத்தாத பட்சத்தில் காலக்கெடு நிர்ணயித்து மாநகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' நடவடிக்கை எடுப்பது அவசியம்.கோவை மாநகரில் இந்தாண்டு துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.இதனால், குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களையும் தாண்டி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர்.வெயில் காலங்களில் குடிநீருக்காக போராடும் மக்களிடம், மழை காலங்களில் மழைநீர் சேமிப்பதில் அலட்சியம் நிலவுகிறது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால், பல கட்டடங்களில் அவை நிறுவப்படாததும், நிறுவப்பட்ட இடங்களில் பராமரிக்கப்படாமலும் காணப்படுகிறது. மழை வரப்போகிறது
ஜூன் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன் வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில் 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும்.இக்கட்டமைப்பு இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, 15 நாட்கள் என, குறிப்பிட்ட நாட்களுக்குள் ஏற்படுத்துமாறு நோட்டீஸ் தர வேண்டும்.அதற்கு மேலும் இவ்வசதி ஏற்படுத்தாத பட்சத்தில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை, தீவிரப்படுத்த வேண்டும்.