| ADDED : ஜூலை 25, 2024 10:22 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சொக்கனூர் - முத்துக்கவுண்டனூர் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள், இந்த சுகாதார நிலையம் வந்து காய்ச்சல், சளி மற்றும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.இந்த ரோட்டில் வளைவு பகுதியில் உள்ள குட்டை அருகே தடுப்புகள் இல்லாமல் திறந்தவெளியாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், குட்டை அருகே வாகனத்தில் வருவோர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது மழை பெய்வதால், குட்டையில் நீர் தேங்கியுள்ளது. எனவே, இங்கு தடுப்புகள் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ''சொக்கனூர் - முத்துக்கவுண்டனூர் ரோடு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த ரோட்டில் இரண்டு இடங்களில் குட்டை உள்ளது. இரண்டு இடமும் வளைவு பகுதியாக இருப்பதால் மக்கள் நலன் கருதி தடுப்புகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'டெண்டர் விடப்பட்டு ரோடு பணி மேற்கொள்ளப்பட்டது. இன்னும் ஐந்து நாட்களுக்குள் குட்டை ஓரம் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.