| ADDED : ஏப் 27, 2024 12:53 AM
கோவை;கோவையில், 'துளி துளியாய் சிறுதுளியாய்' திட்டம் சார்பில், கல்வி நிறுவனங்களுடன் சிறுதுளி இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம், நொய்யல் மையத்தில் நேற்று நடந்தது. கோவையில் உள்ள 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நடைமுறைப்படுத்துதல் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை, மீண்டும் பயன்படுத்துதல், பசுமையான இடங்களை நிறுவுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.வளாகத்திற்குள் மழைநீரை திறம்படப் சேகரிக்கவும், பயன்படுத்தவும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல், கல்வி நிறுவனங்கள் முழுவதும் நீர் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கும், மேம்படுத்தவும், விரிவான நீர் தணிக்கைகளை நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.சிறுதுளியின் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சுஜானி பாலு, சரவணன் சந்திரசேகர், ஆகியோர் மாற்றத்தை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் முக்கிய பங்கு குறித்தும், நீர் தொடர்பான சவால்களை சமாளிப்பது குறித்தும், ஆலோசனை வழங்கினர். பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், சக்தி கல்வி நிறுவனம், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட, பல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.