உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடம் வரைவு அறிக்கை; கோவையில் எகிறும் எதிர்பார்ப்பு! உயிர் பலி, பயிர் பாதிப்பு அதிகம் நடப்பதால் தேவை நிரந்தரத் தீர்வு

யானை வழித்தடம் வரைவு அறிக்கை; கோவையில் எகிறும் எதிர்பார்ப்பு! உயிர் பலி, பயிர் பாதிப்பு அதிகம் நடப்பதால் தேவை நிரந்தரத் தீர்வு

-நமது சிறப்பு நிருபர்-நாட்டிலேயே அதிகளவில் யானை-மனித மோதல் நடக்கும் பகுதியாக கோவை இருப்பதால், யானை வழித்தடத் திட்டத்தை, விரைவாக நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் 2,961 யானைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருப்பதில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வனங்களில் மட்டும், 61 சதவீத யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.கோவை வனக்கோட்டத்தில், யானைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாட்டிலேயே யானை-மனித மோதல் அதிகமாக நடக்கும் பகுதியாக, கோவை மாறியுள்ளது.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஆராய்ச்சிமாணவர்கள், 2006 லிருந்து 2018 வரையிலான 13 ஆண்டுகளில், நாடு முழுவதும் யானை-மனித மோதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை, கடந்த ஆண்டில் ஆய்வு செய்ததில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம், கோவை மாவட்டத்தின் இயற்கை அமைப்புதான்.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில், 300 கி.மீ., துாரத்துக்கு கிராமங்களை ஒட்டி வன எல்லை அமைந்துள்ளன.யானைகள் அதிகளவில் கடந்து செல்லும், மலையை ஒட்டியுள்ள சமவெளிப்பகுதிகள் பெரும்பாலும் தனியார் பட்டா நிலங்களாகவுள்ளன. அந்தப் பகுதிகளில்தான், யானைகள் காலம் காலமாக கடந்து சென்றுள்ளன.ஆனால் கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், இந்த பட்டா நிலங்கள் அனைத்தும் கட்டுமானங்களால் மறிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், ஆய்வு நிறுவனங்கள், சி.ஆர்.பி.எப்.,முகாம் மற்றும் பிளான்டேஷன் ஆகியவை அதிகரித்துள்ளதால், யானைகள் தடம் விலகி குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்குள், படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தான், ஆண்டுக்கு ஆண்டு இரு தரப்பிலும் உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. வனத்துறை புள்ளி விபரப்படி, 2011-2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே பலியாகியுள்ளனர்.இதை மிஞ்சும் வகையில், இதே காலகட்டத்தில் பலியான 176 யானைகளில் 109 யானைகள் இறப்பதற்கு, மனிதர்களின் நடவடிக்கைகளே காரணமாக இருந்துள்ளன.

தீர்வு காணவே இல்லை

இதற்கும் மேலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள், யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புக்கும், பயிர் பாதிப்புக்கும் ஆண்டுதோறும் தமிழக அரசு, பல கோடிகளை இழப்பீடாக வழங்கி வருகிறது. ஆனால், யானை-மனித மோதல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேயில்லை.காலம் காலமாக யானைகள் கடந்து வந்த பாதையில், 25 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை கண்டு கொள்ளாத வனத்துறை, இப்போது ஐகோர்ட் உத்தரவின்படி, யானை வழித்தடங்களை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. இதற்குத்தான் இப்போது ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி எழுந்துள்ளது.யானை வழித்தட வரைவு அறிக்கையில் உள்ளபடி, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், தனியார் நிலங்கள், கட்டடங்கள் பறிபோகுமென்ற எண்ணத்தில் பலரும் இதை எதிர்க்கின்றனர்.அதே போல, மருதமலை, பூண்டி வெள்ளியங்கிரி, அனுவாவி சுப்ரமணியர் கோவில்களுக்கு பக்தர்கள் செல்லவும் தடை வருமென்று தகவல் பரவியுள்ளது. ஆனால் இது இறுதியான அளவீடு இல்லை; இதில் மாற்றங்கள் வரும்; கோவில்களுக்குச் செல்வதற்கும் எவ்விதத் தடையும் இருக்காது என்று, வனத்துறை உயரதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.இதைத் தமிழில் வெளியிட்டு மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்று, கருத்தும் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதை விரைவாகச் செய்ய வேண்டுமென்பதே சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.யானை - மனித மோதலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி என்ற வகையில், யானை வழித்தடங்கள் இறுதி செய்யப்படுவது, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகும் என்று மக்கள் நம்புகின்றனர்.எனவே, தேவையின்றி அதிக இடங்களை எடுப்பதைத் தவிர்த்து, தேவையான இடங்களைத் திட்டவட்டமாக எடுத்து, யானை வழித்தடத்தை நிர்ணயிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ