132 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் வென்ற எமரால்டு
கோவை; டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி விளையாட்டு விழாவில் எமரால்டு அணி, 132 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில், ரூபி, எமரால்டு, சேப்பியர் மற்றும் டைமண்ட் என நான்கு அணிகளாக, மாணவர்கள் பிரிக்கப்பட்டனர். 100 மீ., 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என, 20 வகையான போட்டிகள் இடம்பெற்றன.ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து, போட்டிகள் துவங்கின. ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, கல்லுாரி பேராசிரியர்கள், பணியாளர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளின் நிறைவில் எமரால்டு அணி, 132 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தனி நபர் சாம்பியன் பட்டம், பி.எஸ்.சி., சி.டி., முதலாமாண்டு மாணவர் மிதுன் வர்சனிற்கு வழங்கப்பட்டது. மாணவியர் பிரிவில், பி.எஸ்.சி., உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை மூன்றாமாண்டு மாணவி நந்தனாவிற்கு வழங்கப்பட்டது.