| ADDED : மே 27, 2024 11:24 PM
சூலுார்:தூர் வாரப்படாத நீர் வழித்தடங்களில் மழை நீர் வருவது தடைபட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஏராளமான குட்டைகள் மற்றும் குளங்கள் உள்ளன. இந்த நீர் நிலைகளுக்கு மழை நீர் வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர் வாரப்படாமலும் இருப்பதால் மழை நீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:குளம், குட்டைகளுக்கு நீர் வழித்தடங்கள் மூலம் மழை நீர் வரும் ஒரு சில நீர் நிலைகளுக்கு பல நீர் வழித்தடங்கள் இருக்கும். பல நீர் நிலைகளுக்கு ஒரே ஒரு நீர் வழித்தடம் மட்டும் இருக்கும். அந்த நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டட கழிவுகள் இல்லாமல் இருந்தால் தான், மழை பெய்யும் போது, முழுமையாக மழை நீரானது நீர் நிலைகளுக்கு வரும். ஆனால், சூலுார் வட்டாரத்தில் பெரும்பாலான நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தூர் வாராமல் புதர் மண்டி உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கிராமங்களில் உள்ள குட்டைகள் நிரம்பி இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஊராட்சிகளை தவிர்த்து பெரும்பாலான ஊராட்சிகளில் குட்டைகளுக்கு மழை நீர் வரவே இல்லை. அனைத்தும் ரோட்டில் ஓடியது. பருவ மழை துவங்கும் முன், நீர் வழித்தடங்களை தூர் வார கோரியும், ஊராட்சி நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.