| ADDED : மார் 30, 2024 11:42 PM
கோவை;ரயில் பாதைகள் அருகே யானைகள் வருவது தெளிவாக தெரிய வேண்டுமென்பதற்காக, அப்பகுதியில் துாய்மைப்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தை, கேரள மாநிலத்துடன் இணைக்கும் முக்கிய வழித்தடமாக கோவை - பாலக்காடு ரயில்வே பாதை உள்ளது. இவ்வழித்தடத்தில், எட்டிமடை - வாளையாறு இடையேயான 'ஏ' மற்றும் 'பி' ரயில்வே பாதை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது.இதனால், எட்டிமடை - வாளையாறு ரயில்வே தடத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்க, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ரயில் வழித்தடங்களுக்கு யானைகள் வருவது கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில், இவ்வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் வழித்தடங்களுக்கு அருகே களைச்செடிகளான சீமைக்கருவேலம் உள்ளிட்ட புதர் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.யானைகள் ரயில்பாதை அருகே வருவதை கண்காணிக்க முடிவதில்லை. இதனால் யானைகள், உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு அபாயம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.