பொள்ளாச்சி;விவசாயிகள், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி சோளம் பயிரிட்டால், மானாவாரி மற்றும் இறவையில் அதிக மகசூல் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி அறிக்கை:இந்திய அளவில் தானியங்களில், நெல், கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், 3வது இடத்தைப் பெற்றுள்ளது. சோளப் பயிர் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதில் மாவுச்சத்து 70 சதவீதம், புரதம் 10 முதல்- 12 சதவீதம், நார்சத்து 8--10 சதவீதம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது.சோளப்பயிர் கோவை மாவட்டத்தில், மானாவாரி மற்றும் இறவைப் பயிராகவும் பயிரிடப்படுகிறது. தானியமாகவும், இதன் தட்டு கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.வீரிய ஒட்டு ரகங்களான கோவில்பட்டி கே-12, கோ 32, போன்ற ரகங்கள் சோள பயிர் சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. தை பட்டம், சித்திரை, ஆடி, புரட்டாசி பட்டம் என, எந்தவொரு பருவ காலத்திற்கும் ஏற்ற பயிராகும்.ஒரு ெஹக்டேருக்கு நாற்றாங்கல் முறையில் 7.5 கிலோ, நேரடி விதைப்பில், 10 கிலோ, இறவையில், 10 கிலோ, மானாவாரியில், 15 கிலோ அளவில் விதையைப் பயன்படுத்த வேண்டும்.பயிரின் வளர்ச்சியைப் பொருத்து, பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடி நிலத்தில் நீர் தேங்கக் கூடாது. இதனால், செடிகள் அழுக வாய்ப்புள்ளது.முன்னதாக, நிலத்தை, 3முதல் 4 முறை நன்கு உழ வேண்டும். ஒரு ெஹக்டேருக்கு தேவையான விதைகளை, 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்பைரில்லம், மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1,200 கிராம்) அசோபாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.நிலத்தில் இடுவதாக இருந்தால், ஒரு ெஹக்டேருக்கு, 10 பொட்டலம் (2,000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2,000 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 20 பொட்டலம் (4,000 கிராம்/ெஹக்டேர்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து துாவ வேண்டும். ஒரு ெஹக்டேர் நடவு செய்ய, 7.5 சென்ட் நாற்றாங்கால் தேவைப்படும்.ஒவ்வொரு பாத்தியும் 2 மீட்டர் X 1.5 மீட்டர் அளவு உள்ளதாக அமைக்க வேண்டும். வாய்க்கால்கள் 15 செ.மீ., ஆழம் இருத்தல் வேண்டும். 15 முதல் 18 நாட்களான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.விதைப்பு வரிசைக்கு வரிசை 45 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி 15 அல்லது 10 செ.மீ., இடைவெளி விட வேண்டும். விதைத்த 3, 7, 12 மற்றும் 17ம் நாள் நீர் கட்ட வேண்டும்.அதேபோல, ஒரு ெஹக்டேருக்கு தொழு உரம் 12.5 டன், தழைச்சத்து 70 கிலோ, மணிச்சத்து 45 கிலோ, சாம்பல் சத்து 45 கிலோ அடி உரமாக இட வேண்டும். குருத்து ஈக்களை கட்டுப்படுத்த, 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 750 கிராம் கார்பரில் 50 எஸ்,பி., 50 சதவீதம் மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் நேரத்தில் துாவ வேண்டும்.இதுபோன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி, சோளத்தை பயிரிட்டால் ஒரு ெஹக்டேருக்கு மானாவாரியாக, 2,400 கிலோவும், இறவையாக, 3,500 முதல் 4,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். விபரங்களுக்கு உழவர் செயலி அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.