பொள்ளாச்சி;'நகரப்பகுதியில் குப்பையை தினந்தோறும் முறையாக அப்புறப்படுத்துவதை நகராட்சி பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்,' என, நகராட்சி அதிகாரிகளுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.பொள்ளாச்சி நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடன் ஆய்வு கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, நகராட்சி கமிஷனர் சுப்பையா, நகரமைப்பு அலுவலர் சாந்தி, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் நகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் பங்கேற்றனர்.மாவட்ட கலெக்டர் பேசியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில், மொத்தம், 24,500 வீடுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் இருந்து தினமும், 28 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 170 துாய்மைப்பணியாளர், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர்.மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பையை தரம் பிரித்து சேகரிப்பதுடன், முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தெருக்களில் குப்பை குவிப்பதை தடுக்கவும், நகரப்பகுதியில் குப்பை கொட்டும் இடங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடு, வீடாக குப்பை சேகரிக்க நிர்ணயம் செய்துள்ள அளவு பணியாளர்கள் மற்றும் வாகனங்களை கொண்டு, எவ்வித குறையும் இல்லாமல், புகார்கள் வராத வண்ணம் தினந்தோறும் குப்பையை முறையாக அப்புறப்படுத்துவதை, நகராட்சி பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளில், எத்தனை வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், இணைப்புகள் வழங்காத வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு சீரான இடைவெளியில், குடிநீர் வழங்குவது குறித்தும், தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.