கோவை;'இன்டெக் 2024' சர்வதேச தொழில் கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. கொடிசியா நடத்தும் இந்த கண்காட்சி, 20வது பதிப்பு, 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.கண்காட்சியை இந்திய தொழில் வர்த்தக சபையின் தென் மண்டல தலைவர் நந்தினி துவக்கி வைத்தார். கொடிசியா தலைவர் திருஞானம், 'இன்டெக் 2024' சேர்மன் ராமச்சந்திரன் பங்கேற்றனர். காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது. மதியம் 2.00 மணி வரை தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பார்வையிடும் நேரமாகவும், மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.சர்வதேச அளவில் இந்தோனேசியா, ஜப்பான், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இயந்திர தயாரிப்பாளர்கள், இந்திய மாநிலங்களை சேர்ந்த இயந்திர தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்காலத்தில் ஆள் பற்றாக்குறை, சம்பள உயர்வு, செலவினங்களை குறைத்தல், துல்லியமான பணிகளை கருத்தில் கொண்டு, தானியங்கி இயந்திரங்கள் தயாரிப்புகள் புதுமை காட்டின. ரோபோட்டிக்ஸ், அரங்கு முதலாவதாக வரவேற்கிறது. இந்த ரோபோக்களை கோவையை சேர்ந்த நிறுவனமே விற்பனை செய்கிறது. விஎக்ஸ் 550 ஸ்மார்ட் கேமரா, கோபோட் விஷன், 360 டிகிரியும் சுழலும் கரங்கள் என அசத்தலோடு ஒரே மாதிரியான வேலைகளை சுலபமாக முடிக்கிறது. கோவையை சேர்ந்த நிறுவனங்கள், சர்வதேச தொழில்நுட்பங்களை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்துள்ளன. விற்பனையையும் செய்ய ஆயத்தமாகியுள்ளன. அதிக அளவில் மிக துல்லியமாக செயல்படும் லேத்துக்கள் உள்ளன. இவை, பல்வேறு கோணங்களில் நகர்ந்து செயல்படும் தன்மை கொண்டுள்ளன. சாதாரணமாக மனிதன் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறானோ, அதை கணக்கிட்டு கம்ப்யூட்டருக்குள் கொடுத்து விட்டால், செயல்பட கருவிகள் தயாராகி வருகின்றன. இயந்திரமயமாக்கல் வெகு தொலைவில் இல்லை என்பதை இவை நிரூபிக்கின்றன. ஏற்றுமதி உயரும்
கண்காட்சியின் துவக்க விழாவில் விருந்தினராக பங்கேற்று பேசிய டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூசன்ஸ் செயல் தலைவர் தினேஷ் பேசுகையில், ''உலக அளவில் இன்ஜினியரிங் தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்து வருகிறது. இந்தியாவின் இன்ஜினியரிங் ஏற்றுமதி பங்கு உலக வர்த்தகத்தில் 4.6 சதவீதமாக உள்ளது. இது 10 சதவீதமாக உயர வாய்ப்புகள் உள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு வளர்ச்சி இருக்கும். பெரும் நிறுவனங்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிலை தற்போது மாறி உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் ஏற்றுமதியில் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்புகளில் இப்போதே தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். தொழில் அமைப்புகள் இவற்றுக்கு உதவ வேண்டும்,'' என்றார். 'இன்டெக் 2024'கண்காட்சியில் இன்று
டெக்சாஸ் நிறுவனத்தின் சார்பில், 'உலக உற்பத்தி தொகுப்பு தொலைநோக்கு 2030', கருத்தரங்கு நடக்கிறது. இன்று மாலை 4:45 மணி அளவில் கொடிசியா தொழில் காட்சி 'எப்' அரங்கில் நடக்கிறது. நிகழ்ச்சியில், ரோல்ஸ்ராய் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் தலைவர் கிஷோர் ஜெயராமன் பேசுகிறார். பிரிசீசன் குழு தலைவர் பாலசுப்ரமணியன், அசோக் லேலாண்ட் வடிவமைப்பு துணைத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை திட்ட இயக்குனர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்துள்ளார்.