வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகர் பகுதியில், மின்ஒயர்களில் உரசிய மரக்கிளைகளை மின் ஊழியர்கள் வெட்டி அகற்றினர். ஒரு மாதத்திற்கு மேலாகியும், சாலையோரம் போடப்பட்ட கிளைகள் அகற்றப்படவில்லை.- புனிதா, வினோபாஜி நகர். சாலையில் திரியும் குதிரைகள்
கோவை மாநகராட்சி, 90வது வார்டில், உரிமையாளர்கள் குதிரைகளை தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் அங்கும், இங்கும் நடமாடுகின்றன. திடீரென குறுக்கே ஓடும் குதிரைகளால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். - பிரபாகரன், கோவைப்புதுார். சாக்கடை அடைப்பு
ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்வதில்லை. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை மற்றும் மண் அடைத்து நிற்கிறது. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.- ராஜா, ஆவாரம்பாளையம். வீணாகும் குடிநீர்
கே.கே.புதுார், 44வது வார்டு, சிந்தாமணி நகரில், உப்பு தண்ணீர் குழாய் உடைந்து, தண்ணீர் வழிந்தோடுகிறது. பெருமளவு தண்ணீர் சாக்கடையில் வீணாகிறது. கடந்த 15 நாட்களாக இதே நிலையே நீடிக்கிறது.- ராஜாராம், சிந்தாமணி புதுார். தடுமாறும் வாகனஓட்டிகள்
ஒத்தக்கால்மண்டபம், 10வது வார்டு, பி.வி.எம்.எஸ்.பி., கார்டன் பகுதியில், தார் சாலை வசதியில்லை. தார் சாலை அமைக்க பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கையில்லை. நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விழுகின்றனர். - வெங்கட், ஒத்தக்கால்மண்டபம். புழுதி பறக்கும் சாலை
ஒண்டிப்புதுார், மேம்பாலத்திற்கு அடியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. புழுதி பறக்கும் சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மண், துாசி முழுவதும் அருகிலுள்ள கடைகள், குடியிருப்பு பகுதிகளில் விழுவதால், காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது.- சரவணபவ, ஒண்டிப்புதுார். ஒயரில் உரசும் கிளைகள்
சுண்டக்காமுத்துார் ரோடு, செட்டி வீதி, பிரபு நகர், விஸ்வா அபார்ட்மென்ட் அருகே, மரத்தின் கிளைகள், மின்ஒயர்களில் உரசும்படி உள்ளது. கிளைகள் தெருவிளக்கையும் மூடியபடி உள்ளது. மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், கிளைகளை அகற்ற வேண்டும்.- நவீன்குமார், செட்டிவீதி. சுகாதார சீர்கேடு
சவுரிபாளையம், எல்லை தோட்டம், இந்திரா நகரில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சாக்கடை சுத்தம் செய்யவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.- ரந்தீப், சவுரிபாளையம். எப்ப குழியை மூடுவீங்க?
சுண்டக்காமுத்துார், சமீப் கார்டன், குறிஞ்சி நகரில், பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கவில்லை. சாலையில் உள்ள குழியால் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமமாக உள்ளது. பைக், கார் போன்ற வாகனங்களில் செல்லவும் முடியவில்லை.- தனலட்சுமி, சுண்டக்காமுத்துார். சாலை வசதியின்றி மக்கள் தவிப்பு
பேரூர், தாளியூர், கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3ல், தார் சாலை வசதி அமைத்து தர பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. தாளியூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி விண்ணப்பங்கள் அளித்தும், இன்று வரை சாலை வசதி செய்து தரப்படவில்லை.- சங்கர், தாளியூர். சாலையெங்கும் குழிகள்
கே.கே.புதுார், ராமலிங்க நகர், 44வது வார்டு, நான்காவது கிராஸ் வீதியில், குடிநீர் திட்ட பணிக்காக சாலையில் பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. தற்காலிகமாக குழிக்கு பேட்ச் வொர்க் செய்யப்பட்டது. இருப்பினும், சில மாதங்களில் மீண்டும் குழியாகிவிட்டது. மழைக்காலத்தில் சிரமமாக உள்ளது.- சிவசங்கர், கே.கே.புதுார். கடும் துர்நாற்றம்
சாய்பாபா காலனி, 45வது வார்டு, ஐந்தாவது வீதியில், சாக்கடையில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், குடியிருப்பு பகுதியில், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.- லெனின், சாய்பாபா காலனி.