கோவை;கோவை லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 3,077 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்படுகிறது.1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக ஓட்டு உள்ள இடங்களில், 18 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர், வாக்காளர் பட்டியல் வாசிப்பவர், உதவியாளர் என ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அலுவலர் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் சமயத்தில், உடல் நலக்குறைவு, குடும்ப சூழல், தவிர்க்க முடியாத காரணங்கள் உள்ளிட்ட சூழல் நிமித்தமாக பலரால் உரிய நேரத்தில் பணிக்கு வர முடியாத நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், 20 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' அடிப்படையில் இருப்பர். இதன் படி, கோவை மாவட்டத்துக்கு, 18 ஆயிரம் பணியாளர்கள் தேவை.அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.இவர்களுக்கு 'ரேண்டம்' முறையில், பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உத்தரவு நகல் வழங்கும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
புது வாக்காளர் அட்டை
புதிய வாக்காளர்களுக்கு, இந்திய தபால் துறை மூலமாக வீடு தேடிச் சென்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. போஸ்ட்மேன் செல்லும்போது, வீட்டில் யாரும் இல்லாதபோதும் அல்லது, மொபைல்போனில் அழைத்தாலும், நேரில் வந்து வாங்கிச் செல்லாவிட்டாலும், தேர்தல் பிரிவிடம் அத்தகைய அடையாள அட்டைகள் திருப்பித் தரப்படுகின்றன. அவை, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், மீண்டும் வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று வழங்கப்படுகிறது.