உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மேடாகும் குளத்துார் ரோடு

குப்பை மேடாகும் குளத்துார் ரோடு

சூலூர்:குளத்தூர் ரோட்டில் மூட்டை, மூட்டையாக குப்பை கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நீலம்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்தூர் கிராமம். இங்கிருந்து, அத்தப்ப கவுண்டன் புதூர் பிரிவுக்கு செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ரோட்டில் போக்குவரத்து குறைவாகவே இருக்கும். இந்நிலையில், இந்த ரோட்டின் பக்கவாட்டில் ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குப்பை கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குளத்தூர் மக்கள் கூறியதாவது:குளத்தூர் - அத்தப்ப கவுண்டன் புதூர் ரோட்டின் தென் பகுதியில், மேல்நிலை குடிநீர் தொட்டியும், டிரான்ஸ்பார்மரும் உள்ளன. இந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளத்தில், பல்வேறு வகையான கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு வரும் காகம் மற்றும் பருந்து உள்ளிட்ட பறவைகள் இறைச்சி கழிவுகளை கொத்திக் கொண்டு, மேல்நிலைகுடிநீர் தொட்டி மீது போட்டு விடுகின்றன. இதனால், குடிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. மின்வாரியம் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும் குப்பை கொட்டுவது தொடர்கிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ