உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் குறித்த புரிதல் இல்லை! கள் ஒருங்கிணைப்பாளர் வேதனை

போதைப்பொருள் குறித்த புரிதல் இல்லை! கள் ஒருங்கிணைப்பாளர் வேதனை

பொள்ளாச்சி; ''போதைப்பொருள் பற்றிய புரிதல் தமிழகத்தில் இல்லை,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.கள் இறக்குவதற்கான தடையை நீக்குவதற்கான, கள் விடுதலை மாநாடு, கருத்தரங்கத்துக்கு விவசாயிகள் சங்க ஆதரவு தெரிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் தாத்துார் கிருஷ்ணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்த கிருஷ்ணன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது: உணவின் ஒரு பகுதியான கள்ளில் போதைக்கு காரணமான ஆல்கஹால் அளவு, 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை பழைய சோற்றோடு, தயிர், பழச்சாறு, நறுமண பொருட்களோடு தான் ஒப்பிட வேண்டும்.டாஸ்மாக் மதுக்களில் இருக்கும் ஆல்கஹால் அளவு, 42.8 சதவீதம். தமிழகத்தில், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக கள்ளுக்கு தடை விதித்துள்ளனர். உலகளவில், 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்தவொரு நாட்டிலும் இந்தியளவில் எந்தவொரு மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை. தமிழகத்தில் மட்டும், 33 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கான தடை தொடர்கிறது.தமிழகத்தில் போதைப் பொருள் குறித்த புரிதல் இல்லை. புரிதல் இருந்திருந்தால், கள்ளுக்கு தடை வந்திருக்காது. கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (24ம் தேதி) பல்லடத்தில் கள் விடுதலை மாநாடு நடைபெறுகிறது.அதை தொடர்ந்து, மார்ச், 4ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் கள் விடுதலை கருத்தரங்கம், உடுமலை அருகே கொங்கல்நகரத்தில் நடக்கிறது. இவை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்; ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!

கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் தென்னை விவசாயத்தை காப்பாற்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.கேரளா வேர் வாடல், வெள்ளை ஈ நிவாரணத் தொகையோடு, தென்னை மரங்களை காப்பாற்ற மருந்துகளை முழு மானியத்துடன் வழங்க அரசு முன்வர வேண்டும்.நோய் தாக்குதல், வறட்சி போன்ற காரணங்களால், மத்திய அரசின் கொப்பரைக்கான குறைந்த பட்ச ஆதார விலையுடன், மாநில அரசு ஊக்கத்தொகையாக கிலோவுக்கு, 20 ரூபாய் வழங்க வேண்டும்.ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மையங்களில், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி, பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியிட வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை