| ADDED : ஜூன் 26, 2024 02:13 AM
கோவை;கோவையில் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி வகுப்பு துவங்கியது. தமிழகத்தில் எட்டு வயதுக்கு உட்பட்ட, அரசுப்பள்ளி மாணவர்கள் கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதி செய்யும் வகையில், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம், மாணவர்கள் எழுத்தறிவையும், எண்ணறிவையும் பிழையின்றி கற்க வேண்டும் என்பதாகும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 47 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு, நேற்றுமுன் தினம் துவங்கியது. கோவை ஆர்.எஸ்.புரம் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், 45 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் கூறியதாவது:'எண்ணும் எழுத்தும்' பயிற்சி, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியம். அதை எப்படி மாணவர்களுக்கு, சிறப்பாக கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி நடத்திய பிறகு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.இவ்வாறு, சுபாஷ் கூறினார்.