| ADDED : ஜூலை 31, 2024 01:46 AM
கோவை:''மனித வனவிலங்கு மோதலை வெறும் சட்டங்களால் மட்டுமே தடுத்துவிட முடியாது. தொடர் நடவடிக்கைகள் தேவை,'' என, தமிழக அரசின் வனத்துறை செயலர் பேசினார்.தமிழ்நாடு வனத்துறை சார்பில், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு, கோவை வனக்கல்லூரி வளாகத்தில் நேற்று துவங்கியது.தலைமை வனஉயிரின பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.வனத்துறை தலைவர் சுதான்ஷு குப்தா, வனத்துறை எதிர்கொள்ளும் சவால்கள், செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.தலைமை உரையாற்றிய தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் பேசியதாவது:வனத்துறையின் பல்வேறு செயல்பாடுகளில் பழங்குடியினர் மற்றும் வனத்தையொட்டியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது. பசுமைப் பரப்பை பாதுகாப்பது மற்றும் அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வனத்துறை ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறது. அதில் முதன்மையானது மனித வனவிலங்கு மோதல்மனித வனவிலங்கு மோதல்களை வெறும் சட்டங்களால் மட்டுமே தீர்த்து விட முடியாது. அது மிகப்பெரிய செயல்பாடு; தொடர்ந்து தீர்வை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான தீர்வுகள், பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தீர்வுகள் என சாத்தியமான அனைத்தையும் பின்பற்றி வருகிறோம். மனித வனவிலங்கு மோதலில் அதிகம் தொடர்பிருப்பது, பெரிய பாலுாட்டிகள்தான். அவைதான் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.அடுத்த சவால், வேட்டையாடுதல். தீவிர நடவடிக்கைகள் வாயிலாக வேட்டையாடுதல் தடுக்கப்படுகிறது. வனத்தீ நாம் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவால். செயற்கை நுண்ணறிவு உட்பட இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, சவால்களை எதிர்கொள்வது, நம் திறனை அதிகரித்துக் கொள்வது போன்றவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.வனத்துறையின் இளம் அலுவலர்கள் மிகச்சிறப்பாக செயல்படவும், சவால்களை எதிர்கொள்ளவும் இதுபோன்ற கருத்தரங்குகள் உதவியாக உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்கில், வனத்துறை சார்ந்த பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்வதற்கான பசுமைத் திட்டத்தின் (டி.பி.ஜி.பி.சி.சி.ஆர்.,) தலைமை திட்ட இயக்குனர் அன்வர்தீன், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை வாகாமட்சு எய்ஜி உட்பட வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.