பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த, 10ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 7 நாட்களில், 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக, கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு 'ஏடிஎஸ்' வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் வாழும் தன்மை கொண்டது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று, அதன் வாயிலாக கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால், ஏடிஎஸ் கொசுவை ஒழிக்க, தமிழக அரசு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் டெங்கு பரவலை தடுக்க, ஆட்களை நியமனம் செய்து, வீடு, வீடாக சென்று, டெங்கு காய்ச்சல் வரும்முன், தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ உதவிகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அறிவிப்பு கொடுத்து வருகின்றனர்.இது குறித்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி, மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டியில், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.வீடுகள், தொழிற்சாலைகளுக்கு உள்ளாட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும், 'அபேட்' மருந்து தெளிக்கவும் வந்தால், அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' -என்றனர்.