கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மன் - பொம்மியம்மன், பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, 11ம் தேதி துவங்கியது. புனித தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்சிகள் நடந்தன.அதன்பின், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. இரவு, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, விமான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், செட்டியக்காபாளையம் சுற்று பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.