உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவியருக்கு பயிற்சி வழங்குவோரை தீவிரமாக கண்காணிக்க மாதர் சங்கம் கோரிக்கை

பள்ளி மாணவியருக்கு பயிற்சி வழங்குவோரை தீவிரமாக கண்காணிக்க மாதர் சங்கம் கோரிக்கை

கோவை:கல்வி நிறுவனங்களில், பயிற்சி வழங்கும் ஊழியர்களை, தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கல்வி நிறுவனங்களில், தற்போது மாணவியர், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, கோல்கட்டாவில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை முகாமின் போது, 8 ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புதுச்சேரியில், கல்லுாரி மாணவி கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வால்பாறை அரசு கலைக் கல்லுாரியில் மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர, பல அரசு துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பெரும்பலான பாலியல் பலாத்கார நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள், சிறப்பு பயிற்சி அளிக்க வந்தவர்களாகவே உள்ளனர்.இவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், பெண்களிடம் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதாகவே புகார் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, நான் முதல்வன் திட்டத்திலும், பல்வேறு பயிற்சிகளை தனியார் நிறுவன ஊழியர்களே வழங்குகின்றனர். அந்த ஊழியர்களின் செயல்பாடுகளை, சிறப்பு அலுவலர் வாயிலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் ராதிகா கூறுகையில், ''பொதுவாக மாணவியருக்கு பயிற்சி அளிப்பவர்களை, மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களது பின்புலம் குறித்து தெளிவாக அறிந்த பின்னரே, பயிற்சி அளிக்க அறிவுறுத்த வேண்டும். யார் பயிற்சி வழங்குகின்றனர் என்ற முழுவிபரங்களையும் பெற வேண்டும். கலெக்டர் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும். அவர் அறிவுரை, அனுமதியின்றி பயிற்சி வழங்கக்கூடாது. ஆசிரியர்களுக்கும் மாணவியருக்கும், இத்தகைய பாலியல் சீண்டல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவியர் புகார் தெரிவிக்க எளிய நடைமுறையை வழங்க வேண்டும்,'' என்றார். தற்போது, நான் முதல்வன் திட்டத்திலும், பல்வேறு பயிற்சிகளை தனியார் நிறுவன ஊழியர்களே வழங்குகின்றனர். அந்த ஊழியர்களின் செயல்பாடுகளை, சிறப்பு அலுவலர் வாயிலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை