மேட்டுப்பாளையம்:காரமடையில் கடந்த பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில், பட்ட பகலில் கொள்ளையடித்த கொள்ளையர்களை, பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.காரமடையில் கடந்த பிப்.,15ம் தேதி, வசந்தம் நகரை சேர்ந்த சந்திரசேகர், வீட்டில் மதிய நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத போது, முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.8 லட்சத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.பின் அதே கும்பல், அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் என்பவரது வீட்டிலும், கதவை உடைத்து, சுமார் 4 சவரன் தங்க நகைகள், பணம் ரூ. 11,000ஐ கொள்ளையடித்தனர். கொள்ளையர்களை பிடிக்க, காரமடை போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர். தனிப்படையினர் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள, சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்தனர். ஆனாலும் இதுவரை கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.போலீசார் கூறுகையில், 'கொள்ளையர்கள் மொத்தம் 3 பேர். இவர்கள் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து, கொள்ளையடிக்க வீட்டிற்குள்ளே சென்றனர். அப்போதும் ஹெல்மெட் அணிந்து தான் இருந்தனர்.கொள்ளையடித்துவிட்டு பைக்கில் கிளம்பியபோது, அருகில் உள்ள வீடுகளில் வெளியே நின்றவர்களிடம் கத்தியை காட்டி, செய்கை வாயிலாக மட்டும் மிரட்டினர். பேசினால் குரல், பாஷை தெரிந்துவிடும் என எண்ணி, இவ்வாறு தெளிவாக செயல்பட்டனர். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்' என்றனர்.----