| ADDED : மே 02, 2024 11:57 PM
கோவை:உத்தரகாண்ட்டில் நடந்த தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணியில் கோவை மாணவியர் அசத்தலாக விளையாடினர். தேசிய அளவிலான, 16வது சப்-ஜூனியர் தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதன் மாணவர் பிரிவில், 28 அணிகளும், மாணவியர் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்று லீக் மற்றும், 'நாக் அவுட்' முறையில் போட்டியிட்டன. இப்போட்டியில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் அணி, காலிறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. மாணவியர் அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதிப்போட்டியில், தமிழக அணி கேரளா அணியை 5 - 3 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அசாம் அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. வெள்ளி வென்ற தமிழக அணியில், கோவை கேம்போர்டு பள்ளி மாணவியர் மோக்சி போரா, சஞ்சனா; சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியின் அனிந்திதா; எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவி சன்ஸ்கிரித்தி ஆகியோர் தங்களின் திறமையால், தமிழக அணியின் வெற்றிக்கு உதவினர். வெற்றி பெற்ற மாணவியரை, தென் இந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியன், மாநில ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், தமிழக அணி பயற்சியாளர் ராஜசேகர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் தணிகைவேல், பிரேம்நாத் வாழ்த்தினர்.