| ADDED : ஜூலை 18, 2024 12:09 AM
கோவை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும், மழையின் காரணத்தால் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்க செல்வதையோ தவிர்க்க வேண்டும்.ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழைபெய்யும் நேரத்தில் வெளியில் இருக்க வேண்டாம். உயர்மின்சாரம் செல்லும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம். பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும். மின்கம்பங்களில் அவற்றை கட்டக்கூடாது. வெள்ள அபாயம் குறித்தோ, மழை வெள்ளம் குறித்த இன்னல்கள் குறித்தோ, மாவட்ட நிர்வாகத்தின் '1077' என்ற கட்டணமில்லா போன் எண்ணுக்கு, தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.