உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உற்பத்தியும் இல்லை; விலையும் கிடைக்கல! பரிதவிக்கும் பட்டு விவசாயிகள்

உற்பத்தியும் இல்லை; விலையும் கிடைக்கல! பரிதவிக்கும் பட்டு விவசாயிகள்

உடுமலை : பட்டுக்கூடு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் இழந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. இதற்கு, இப்பகுதியில், சீதோஷ்ண நிலையே முக்கிய காரணமாக இருந்தது.ஆண்டு முழுவதும் வீசும் காற்று, மிதமான தட்பவெப்பம் உள்ளிட்ட சீதோஷ்ண நிலையால், தரமான மல்பெரி இலைகளையும், புழு வளர்ப்பு மனைகளில், நுாலிழை நுாற்புத்திறன் அதிகமுள்ள பட்டுக்கூடுகளையும் உற்பத்தி செய்ய முடிந்தது.பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகளை அழைத்து வந்து, தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் அளவுக்கு, வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை பகுதி விவசாயிகள் அசத்தி வந்தனர்.ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தொழிலில் நிலவி வரும் பிரச்னைகளால், பலர் மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மழையில்லாமல், வறட்சியான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது.இதனால், மல்பெரி செடிகளில் இருந்து தரமான இலைகள் கிடைப்பதில்லை. போதிய திரட்சி இல்லாமல் அறுவடை செய்யும் இலைகளை, புழுக்களுக்கு உணவாக அளிக்கும் முன் வாடி விடுகின்றன.புழு வளர்ப்பு மனையிலும், அதிக வெப்ப நிலை நிலவுவதால், புழுக்களின் இயல்பான வளர்ச்சி குறைந்து விட்டது. பெரும்பாலான புழுக்கள் மல்பெரி இலைகளை உண்ணாமல், சில நாட்களில் இறந்து விடுகின்றன.குறிப்பிட்ட நாட்களில், கூடும் கட்டுவதில்லை. இதனால், பாதியாக குறைந்து விட்டது.அனைத்து பகுதிகளிலும், உற்பத்தி பாதித்தபோதும், அரசு கொள்முதல் மையங்களில், பட்டுக்கூடுகளுக்கு விலை அதிகரிக்கவில்லை.ஒவ்வொரு 'பேட்ஜ்' புழு வளர்ப்பிலும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், பலர், மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பட்டுக்கூடு உற்பத்தியின் நிலை குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். உற்பத்தி செலவுக்கேற்ப விலை கிடைக்கவும் நடவடிக்கை தேவையாகும்.இவ்வாறு, தெரிவித்தனர்.மைவாடி அரசு கொள்முதல் மையத்தில், கடந்த 7 ம் தேதி ஏலத்தில், வெண்பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்சமாக, கிலோவுக்கு, ரூ; 487; குறைந்தபட்சமாக 370 ரூபாய் விலை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை