உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல்கேம் வேணாம்; விளையாட்டுல தான் மகிழ்ச்சி! அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம் 

மொபைல்கேம் வேணாம்; விளையாட்டுல தான் மகிழ்ச்சி! அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம் 

பொள்ளாச்சி : 'எங்களுக்கு மொபைல் கேம் வேண்டாம்; மரபு விளையாட்டுக்களில் தான் மகிழ்ச்சி இருக்கிறது,' என, பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் கோரஸாக சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ஓடி விளையாடு பாப்பா என, பாரதி சொன்னபடி கடந்த, 80 - 90ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள், புழுதி மண்ணிலும், வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே சக நண்பர்களோடு ஓடி, ஆடி விளையாடினர்.விடுமுறை நாட்களில், கால்பந்து, கபடி என விளையாடுவதுடன், ஆறு, கிணறுகளில் குளித்து நீச்சல் பழகிய காலமும் உண்டு. உடல் ஆரோக்கியத்துடன், மூளைக்கும் வேலை கொடுக்கும் வகையில், புதிய, புதிய விளையாட்டுகளை கண்டுபிடித்து விளையாடினர்.நாகரிக உலகில், மொபைல்போன் மற்றும் வீடியோ கேம்களை விளையாடுவதும், ரீல்ஸ், வீடியோக்களைபார்ப்பதும் பேஷனாகி விட்டது. அதிக நேரம் மொபைல்போனில் செலவிடுவதால், சிறுவயதிலேயே கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.நொறுக்குத்தீனிகளை உண்டு, மொபைலில் மூழ்குவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், மாணவர்களின் இயல்பை வெளிக்கொணரும் மரபு விளையாட்டுகளை விளையாட கற்றுக்கொடுத்து, அதை விழாவாக நடத்தி வருகிறது பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளி.பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், படிப்போடு மாணவர்களது திறமைகளை மேம்படுத்த ஆசிரியர்கள் உதவுகின்றனர். அதில், 'மனமகிழ் மரபு விளையாட்டு' என்ற பெயரில் ஆண்டுதோறும் பழைய விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடி மகிழ ஏற்பாடு செய்கின்றனர்.அதன்படி, மன மகிழ் மரபு விளையாட்டு, பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பிடித்த விளையாட்டுக்களை விளையாடினர்.கயிறு இழுத்தல், குலைகுலையா முந்திரிக்கா, நொண்டி, கண்ணாமூச்சி, நுங்கு வண்டி, டயர் ஓட்டுதல், கயிறாட்டம், ஒரு குடம் தண்ணி ஊத்தி விளையாட்டு, பரமபதம், தாயம், பச்ச குதிர, பல்லாங்குழி, கபடி, பாம்பே மிட்டாய், பறை, கரகம், தேவராட்டம், ஜிக்காட்டம், கும்மி என பல விளையாட்டுக்களை விளையாடினர்.இதைக்கண்ட பெற்றோர், பலரும் தங்களது நண்பர்களுடன் விளையாடிய நினைவுகள் வந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.தமிழ் ஆசிரியர் பாலமுருகன், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.மாணவர்கள் கூறுகையில், 'மொபைல்போன் கேம் எல்லாம் போரடிக்கும்; அத விட்டு வந்து விளையாடியதால் உற்சாகம் கிடைக்குது. மொபைல்கேம் வேண்டாம்; இத விளையாட ஆரம்பிச்சுட்டோம். இது எங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும், படிப்பில் கவனம் செலுத்தவும் உதவியாக இருக்குது,' என, தெரிவித்தனர்.

சோறு ஊட்டுவதிலேயே ஆரம்பம்!

ஆசிரியர்கள் கூறியதாவது:குழந்தைகளுக்கு கதைகளை சொல்லி சோறு ஊட்டாமல், 'டிவி'க்களில் பாடல்களை போட்டும், மொபைலை கையில் கொடுத்து, சாப்பிட வைப்பது வழக்கமாகிவிட்டது.சிறு வயதிலேயே அவர்கள், மொபைல்போன் பார்க்க துவங்கி விட்டனர். இதனால், தெருக்களில் விளையாட ஆர்வம் காட்டாமல், மொபைலில் புதிய கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர்.ஒரு கால கட்டத்தில் அவர்கள் மொபைலுக்கு அடிமையாகி, படிப்பதில் கவனமின்றி தவிக்கின்றனர். இந்த பழக்கம், குழந்தைகளிடம் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த மரபு விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினோம்.பள்ளி முடிந்ததும், இந்த விளையாட்டுக்களை விளையாடிய பின்னரே, மாணவர்கள் வீட்டுக்கு செல்கின்றனர். அவர்கள் கற்றதை வெளிப்படுத்த, ஆண்டுதோறும் மரபு விளையாட்டு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை