உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி அருகே ஆக்கிரமிப்பு; கேள்விக்குறியான பாதுகாப்பு

பள்ளி அருகே ஆக்கிரமிப்பு; கேள்விக்குறியான பாதுகாப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி, தனியார் பங்களிப்புடன் நிழற்கூரை அமைத்தால், மாணவிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பதோடு, அப்பகுதியும் பொலிவு பெறும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி, கோட்டூர் ரோட்டில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தையொட்டி, நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில், பஸ் ஸ்டாப் உள்ளதால், பொதுமக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். பள்ளி சுற்றுச்சுவர் அருகே, இளநீர் கடை, தள்ளுவண்டிகடைகள் ஆக்கிரமித்துள்ளன. வெட்டப்பட்ட இளநீர் மட்டைகள் உள்பட, கழிவுகளும் இங்கேயே கொட்டப்படுகின்றன. பயன்பாட்டில் இல்லாத பழைய டூவீலர்கள் பலவும் இதே பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகளோ, போலீசாரோ கண்டுகொள்வதில்லை. இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அங்கு மண் குவித்த பகுதிகளை ரோட்டுக்கு இணையாக சமன்படுத்த வேண்டும்.இதனால், மாலையில் பள்ளி முடிந்து பஸ் வரும்வரை காத்திருக்கும் மாணவியர் நெரிசலின்றி, பாதுகாப்பாக நிற்பதற்கு போதுமான இடம் கிடைக்கும்.மேலும் இந்த இடத்தில், நகராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவரையொட்டி, மிக நீளமாக உட்கார்வதற்கு வசதி செய்து கொடுக்கலாம். இதற்காக தன்னார்வ அமைப்புகள், நன்கொடையாளர்களை நகராட்சி நிர்வாகம் அணுகி, மழை, வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நிழற்கூரை அமைத்துக் கொடுக்கலாம்.பள்ளி முடிந்து வரும் மாணவியர் பஸ் வரும் வரை, புத்தகப்பை சுமையுடன் நிற்க வேண்டிய தேவை இருக்காது.பள்ளியின் மேற்கு சுற்றுச்சுவரையொட்டி, எந்தவொரு ஆக்கிரமிப்பும் இல்லாததை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இது மாணவியருக்கு மட்டுமின்றி, பஸ் நிறுத்தத்துக்காக வரும் பொதுமக்கள், அறிவுசார் மையத்துக்கு வரும் வாசகர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் கவனியுங்க!

அறிவுசார் மைய நுாலகத்தையொட்டி, 'நம்ம டாய்லெட்' அமைந்திருக்கிறது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வளாகம், பராமரிப்பு இன்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த வளாகத்தையும் சுத்தப்படுத்தி, கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இது அப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி, பஸ் ஸ்டாப்புக்கு வரும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை